கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே இஸ்லாமிய அழைப்புப் பணி என்பதை ஜம்மிய்யதுல் உலமா எப்போது உணர்ந்து கொள்ளும்? – ACJUவின் கடிதத்திற்கு SLTJ பதில்.!

image

05.11.2015
தலைவர் / செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10

நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!!
அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில் தென்னிந்திய மார்க்க அறிஞர் மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்வது ஆரோக்கியமற்றது என்று கூறி அதனை தவிர்ந்து கொள்ளுமாறு எமக்கு ACJU சார்பில் கடிதம் எழுதியுள்ளீர்கள்.

உங்களின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அவரது 2005 ஆம் ஆண்டு வருகையின் போது ஏற்பட்டது போன்ற சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குழைக்கும் விதமான சம்பவங்கள் (?) ஏற்பட்டு விடும் என்ற காரணத்தை முன்வைத்து, அவரது விஜயம் ஆரோக்கியமற்றதால் அதனை தவிர்ந்து கொள்ளுமாறு பல அமைப்பினரும், அரபுக் மத்ரஸாக்களும், நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் குறிப்பிட்டு, அது தான் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் கூட என்றும் அறிவித்துள்ளீர்கள்.

முதலில், 2005 ஆம் ஆண்டில் மவ்லவி P.J அவர்களின் வருகையினால் சமூக ஒற்றுமைக்கோ, சகவாழ்வுக்கோ எவ்வித பாதிப்பும் அவர் தரப்பாலோ, அவரை அழைத்து வந்த எமது ஜமாஅத் சார்பாகவோ ஏற்படுத்தப்படவில்லை. வஹியின் செய்திகள் ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சமூக தளத்தில் முன்வைக்கப்பட்டது மாத்திரமே நிகழ்ந்தது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் குர்ஆனிய பண்பாடும், சமூக நாகரீகமும் அறியாத சில அறிவீனர்களால் தான் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு அவரது வீஸா இரத்துச் செய்யப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

மார்க்க பணி செய்வதற்கு இலங்கை வருபவர்கள் எடுக்கு வேண்டிய வீஸா எடுக்காமல் மார்க்க பிரச்சாரம் செய்கிறார் என்று அன்று ஆளும் தரப்பிலிருந்துக் கொண்டு மார்க்கத்தை விலை பேசிய சில அரசியல்வாதிகளும் மார்க்க அறிஞர்களும் (?) செய்த சூழ்ச்சியே அவரது வீஸா ரத்து செய்வதற்கு காரணமாக அமைந்ததே தவிர அறிஞர் மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்களின் இலங்கை வருகை சக வாழ்விற்கோ சமூக ஒற்றுமைக்கோ எந்தவொரு பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால் அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகி
றார்கள்.

அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள்.

இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

பி.ஜெ அவர்கள் இலங்கை வருவதை எதிர்த்து எச்சரிக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா காதியானிகளின் தலைவர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள் இலங்கை வருகின்ற நேரங்களிலெல்லாம் இப்படி எச்சரித்ததுண்டா?

ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக எச்சரித்து இலங்கை வருகையை நிருத்துவதற்கு ஜம்மிய்யதுல் உலமா ஏன் பாடுபடவில்லை?

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மியன்மாரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாய் கொண்று குவித்த அஷின் விராதோ தேரர் கடந்த காலங்களில் இலங்கை வர வழைக்கப்பட்டார். இனவாதம் மேலோங்கியிருந்த ஒரு கால கட்டத்தில் இனவாத தீயை பரப்புவதற்காகவே அத்தேரர் இலங்கை கொண்டு வரப்பட்டார். அவர் இலங்கை வருவதை தடுப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?

குறைந்த பட்சம் அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டீர்களா?

சமூக பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் செய்தே தீர வேண்டிய இத்தனை பணிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் வருகையை மாத்திரம் தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. சிந்திப்பீர்களா?

பி.ஜெ விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிக்கை விட்டுள்ளீர்கள். அப்படி அவர் இஸ்லாமிய அடிப்படையின் எந்த பகுதிக்கு மாற்றமாக கருத்து வெளியிட்டார்?

அவர் வெளியிட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் எங்களிடம் தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தயாரா?

ஒருவரின் கருத்துக்களைப் பற்றிய எந்த வித புரிதலையும் மக்கள் மன்றில் முன் வைக்காது, வெறுமனே இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றம் என்று மாத்திரம் கூறிவிடுவதினால் கடமை முடிந்து விட்டாதாக எண்ணிக் கொள்கின்றீர்கள் போலும்.
உண்மையில் பி.ஜெ யின் கருத்துக்களில் மார்க்கத்திற்கு மாற்றமான கருத்துக்கள் இருந்தால் அதனை எங்களிடம் நீங்கள் முன் வைத்திருக்கலாமே?

ஏன் அதனை செய்ய ஜம்மிய்யா முன்வரவில்லை?

சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் சந்திப்புக்கான நேரம் தாருங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் வேண்டுகோள் விடுத்த போது, “தலைவர் நாட்டில் இல்லை. வெள்ளிக்கிழமை தான் வருகின்றார் வந்தவுடன் நேரம் தருகின்றோம்.” என்று பொய் சொல்லி காலம் கடத்தி விட்டு இப்போது பி.ஜெ வருகையை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எமக்கு கடிதத்தை அனுப்பி விட்டு கடிதம் படிக்கப்படும் முன்பே ஊடகங்களுக்கு அவசர அவசரமாக குறித்த கடிதத்தை அனுப்பி வைத்ததின் மர்மம் என்ன?

இப்போது உங்கள் தலைவர் என்ன ஆனார்? இந்தக் கடிதம் எழுதுவதற்கும், ஊடகங்களுக்கு அனுப்புவதற்கும் தலைவர் நாட்டில் இல்லையே? ஏன் இந்த இரட்டை நிலை? இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் உலமாக்கள் சபை என்று சொல்லிக் கொண்டு இப்படி நயவஞ்சக வேடம் போடுவது நபிகளாரின் வாழ்வுக்கு மாற்றமில்லையா?

08.11.2015 அன்று நடைபெறவுள்ள நிகழ்வானது, திருமறைக்குர்ஆனின் சிங்கள மொழியிலான தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வாகும். இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மனங்களுக்கு படைப்பாளன் அல்லாஹ்வின் செய்திகளை எளிய நடையில், அறிவுபூர்வமாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியின் வெளியீட்டு நிகழ்வாகும். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் மிகவும் எளிய நடையில் அதிகமான விளக்கங்களுடன் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை தான் நாங்கள் வெளியிடுகிறோம்.

அதன் முக்கியத்துவத்தையும், பெருமதியினையும் அதனை நீங்கள் படித்திருந்தால் அறிந்துக் கொள்வீர்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் அல்-குர்ஆன் தொடர்பாகவும், இஸ்லாம் பற்றியும் பரப்பப்பட்ட அனைத்து தவறான கருத்துக்களும் ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டே எமது குர்ஆன் மொழியாக்கம் சிறப்புர செய்யப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மொழியாகத்தை படித்தால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அல்லாஹ்வின் அருளால் கண்டிப்பாக நல்லெண்ணம் கொள்வார்கள்.

எனவே முஸ்லிம் சமுதாயம் சார்பாக செய்யப்பட்ட இத்தகைய மிக முக்கியமான பணியை முடக்கும் விதமாக அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் குறைத்து விடும் என்பதை நீங்கள் சிந்திக்க தவறியதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

காலத்தின் அவசியத் தேவை கருதி நடைபெறும் இத்தர்ஜுமா வெளியீட்டினால் சமூக சகவாழ்வு கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

மேலும் அறிஞர் பீ. ஜையனுலாப்தீன் அவர்களின் வருகையையும் சிறப்புரையையும் எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள்.

எனவே இந்நிகழ்வை எதிர்க்காமல் தாங்களும் கலந்து அவரது சிறப்புரையை செவியேற்குமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றோம்.

எல்லம் வல்ல அல்லாஹ் எம் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக் B.com
பொதுச் செயலாளர் – SLTJ
http://www.sltj.lk/sltj-acju/

image

image

image

image

Advertisements

Posted on 05/11/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

 1. சகோதரர் அப்துல் ராசிக் அவர்களே,

  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா என்பது இலங்கையிலுள்ள எல்லா (நான் நினைக்கிறேன், அனேகமாக உங்கள் இயக்கத்தினரை தவிர) இயக்கங்களினதும் ஒரு கலவையே! அவர்களினால் அரங்கேற்றப்பட்ட கபட நாடகங்கள் பலவற்றை (ஹலால் விடயம், பொதுபலசெனா விடயம், பெருநாள் தீர்மான விடயம், உங்கள் இயக்கம் சம்பந்தப்பட்ட விடயம் உட்பட) “சிந்தித்து செயற்படக்கூடிய” பொது மக்களில் உள்ள நாங்கள் அறிந்து தெளிவாக இருக்கின்றோம்.

  எனவே அவர்களின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்படுவார்கள் என்பதை நீங்களும் “சிந்தித்து செயற்படக்கூடிய” பொதுமக்களாகிய நாங்களும் ஏற்கனவே அறியக்கூடியதாக உள்ளோம். அதுமட்டுமல்ல… அவர்கள் PJ ஐ தடுப்பதற்கு, அல்லது திட்டமிடப்படுள்ள உங்கள் நிகழ்வுகளை தடுப்பதற்கு வேறு சூழ்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். ஆனால்… நீங்கள் அல்லாஹ் விரும்பக்கூடிய வழிகளிலேயே அவற்றை முறியடிக்க வேண்டும் (உதாரணம்… இந்தப்பதில் கடிதம்).

  அதோடு, இன்னொரு வேண்டுகோள்….

  என்னைப்போன்ற சிலர், மௌலவி PJ அவர்கள் சில ஸஹீஹான ஹதீஸுக்கு முரண்படுவதாக (உதாரணம்…சூனியம்) சில இணையத்தளங்கள் வாயிலாக அறிகிறோம். இதுவிடயத்தில் நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

  இந்த பிற்குறிப்பு எழுதும் நான் எந்த இயக்கத்தையும் சார்ந்திருக்கவில்லை, அதற்கு விருப்பமும் இல்லை. ஆனால்… எவரது போதனைகளும், விளக்கங்களும், வழிகாட்டல்களும் அல்குரானுக்கும், நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரத்தோடும் ஒத்திருக்குமாயின், ஆதாரமாக எத்திவைக்கப்ப்படுமாயின், நிச்சயமாக (அல்லாஹ்வுக்காக) அதனை செவிமடுக்கவும், ஏற்றுக்கொள்ளவும், (எனது தகுதிக்கேற்ப) செயற்படுத்தவும் நான் தயாராக உள்ளேன்.

  முக்கியமாக, ஷியாக்களின் அட்டகாசங்களுக்கு… குறிப்பாக சஹாபாக்கள் மீதான தூசனைக்கும், மற்றும் உண்மை முஸ்லிம்கள் மீதான ஷியாக்களின் பகிரங்க தூசனை, கர்ச்சனைக்கும் (மீராவோடையில் உள்ள அவர்களது அரபிக் கல்லூரியில் கடந்த நோன்பு காலத்தின்போது நடாத்தப்பட்ட நிகழ்ச்சியை வைத்து) சாட்சியாக இருக்கின்றேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s