முஸ்லிம் காங்கிரசிலும்,வில்பத்துவிலும் அமைச்சர் றிஷாத்தின் உண்மை முகம்!

image

அண்மையில் கிளறி விடப்பட்டு முஸ்லிம்களிற்கு எதிராக விஸ்வரூபம்  எடுத்துள்ள வில்பத்து விவகாரத்தினைக் கையாளும் விடயத்தில் அமைச்சர் றிஸாத் அதீத கரிசனை காட்டி வருவது யாவரும் அறிந்ததே.இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களிற்கு நிகராக அமைச்சர் றிஸாத் வர்ணிக்கப்படும் நிலையும் தோன்றியுள்ளது.மர்ஹூம் அஸ்ரபினை எதிர்த்தவர் எனக் கூறி முஸ்லிம்களிடத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இவரும் தான் ஏதோ அஸ்ரபின் பாசறையில் பயிற்று விக்கப்பட்டு மு.காவின் தற்போதைய தலைவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மு.காவினை விட்டும் விலகிச் சென்ற ஒருவர் போல தன்னை பல இடங்களில் கூறியும் வருகிறார்.( அண்மையில் ஒரு பத்திரிகை நேர்காணலில் அவ்வாறே கூறி இருந்தார் )எனவே,
1. வில்பத்து விவகாரத்தில் அன்றும்,இன்றும் அமைச்சர் றிஸாத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?
2. மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் வாழ்ந்தகாலத்திலும்,அவர் மரணித்த பின்னரும்  மு.காவுடன் அமைச்சர் றிஸாத்தின் உறவு எவ்வாறு இருந்தது? என்ற வரலாற்றினை  சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. .
வில்பத்து பிரச்சினை இன்று நேற்று அரும்புவிட்ட ஒன்றல்ல.மாறாக மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் 1994 ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டு வரை வில்பத்து விவகாரம்,யாழ்ப்பான முஸ்லிம்களின்  வெளியேற்றம் போன்றவற்றில் அதீத கரிசனை காட்டிய வரலாறுகளினை  நாம் மறந்திட இயலாது.அந் நேரத்தில் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து போராடாது , மௌனித்திருந்த அமைச்சர் றிஸாத் இன்று தன்னை ஓர் தியாகியாய் வெளிக் காட்டிக் கொண்டு தனது உயிரினைப் பணயம் வைத்து போராடும் ஒரு போராட்டம் போன்று வில்பத்து விவகாரத்தினைக் காட்டியும் வருகிறார்.உயிரினைப் பணயம் வைத்தாப் போல் தன்னை சித்தரிப்பது இவரிற்கு ஒன்றும் புதிதல்ல.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் அரசியல் வாதிகளில் அநேகமானவர்கள் மகிந்தவினைக் கை விட்டு வெளியே வந்த போதும் இவரின் வருகை மாத்திரம் உயிரினைப் பணயம் வைத்தாப் போல் சித்தரிக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.அன்று வில்பத்து விவகாரத்தில் இவரிற்கில்லாத அக்கறை  இன்று ஏன் புதிதாய் உதித்துள்ளது? என்ற வினாவினை எழுப்பினால் சில விடைகளினைப் பெற முடியும்.இன்று அமைச்சர் ஹக்கீம் வாய் மூடி மௌனம் காப்பதற்கான சில ஏற்கத் தகுந்த காரணங்கள் உள்ளவா இல்லையா என்பதை இப்போதைக்கு சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு,அமைச்சர் றிஸாத் அவர்களுக்கு காலம் கடந்த ஞானமும்,வேகமும் திடீரென்று எழுந்ததன் பின்னணியை பற்றி எவரும் கேள்வி எழுப்பக் கூட இடங்கொடாது வில்பத்து விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டதன் ரகசியம் என்ன ?

இன வாதிகளின் துவேச ஏவுகணைகள்  மர்ஹூம் அஸ்ரபினை நோக்கி இடை விடாது வந்து கொண்டிருந்த சூழ் நிலையில் முஸ்லிம்களின் மிகப் பெரிய இலட்சியங்களினை தனது தோள் மீது சுமந்து கொண்டு  மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் தனது பயணப் பாதையினை அமைத்திருந்தார். அன்று மர்ஹூம் அஸ்ரபினை முஸ்லிம்கள் பலப்படுத்த வேண்டிய கடப்பாடு இருந்ததனை யாரும் மறுத்திட இயலாது.ஆனால்,அமைச்சர் றிஸாத்தோ மர்ஹூம் அஸ்ரபினை ஏற்காது சு.க இன் அமைப்பாளர் பதவியிலும்,சு.கா அபேட்சகர் ஒருவரினது செயலாளராகவும் பணியாற்றுவதிலேயே ஆர்வமாக இருந்தார் .

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .சீ.எஸ் ஹமீத் அவர்கள் மிகவும் முதிர்ந்த அரசியல் வாதியாக .தே. இல் காலூன்றி இருந்த போதிலும் அஸ்ரபின் செயற்பாடுகளிற்கு ஐ.தே.க இல் இருந்தவாறே ஆதரவளித்தார்.இன்னும் ஓரிரு வருடங்கள் அவர் உயிர் வாழ்ந்திருந்தால் அவர் மு.கா பக்கம் மாறி இருப்பார் என்று பலராலும் பேசப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.முன்னாள் அமைச்சர்களான பௌசி,மன்சூர் ஆகியோர் அன்று முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக வேறு ஒரு கட்சியில் காலூன்றி இருந்ததன் காரணமாக அஸ்ரபினை ஏற்காமை அவர்களின் தன் மானப் பிரச்சனைகாரணமாக இருந்திருக்கலாம்.என்றாலும் கூட இளைஞர்கள் அனைவரும் அக் காலத்தில் அஸ்ரப் என்ற விருட்சகத்தின் கீழே நிழல் தேடி வந்ததமையினை வரலாறுகள் தெளிவாக கூறி நிற்கின்றன.அப்போது இளைஞராக இருந்த ரிஷாத் அவர்கள் அக் காலத்தில் மர்ஹூம் அஸ்ரபினை ஏற்காது வேறு கட்சிகளில் இருந்தமை மர்ஹூம் அஷ்ரபின் கொள்கைகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் உடன் பாடு இருக்கவில்லை என்பதனை தெளிவாக காட்டுகின்றது.
அண்மையில் இடம் பெற்ற நேர் கானல் ஒன்றில் அமைச்சர் றிஸாத் தீகவாபி விவகாரத்தில் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் சோபித தேரருடன் முரண்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் தீகவாபி விவகாரத்தில் மாவனல்லைக் கலவரத்திற்கு காரணமானவர் எனக் கூறப்படுகின்ற சோம தேரருடனேயே  முரண்பட்டிருந்தார்.அஷ்ரப் அவர்களின் மிகப் பிரசித்தமான அந்த விவாதத்தில் பங்குபற்றிய தேரர் யார் என்பதைக் கூட அறிந்திராத அமைச்சர் றிஸாத்தினை  மர்ஹூம் அஸ்ரபிற்கும் ஒப்பிட்டு பேசுகிறவர்களின் அறியாமை குறித்து வருந்தவேண்டி யுள்ளது.அன்று எவரின் கொள்கையில் உடன்பாடு இல்லாமல் இருந்தாரோ அவரினை இன்று தனது உதாரணப் புருஷராகக் கூறுவது அவரின் அரசியலின் நோக்கத்தினை வெளிப்படுத்துகிறது.எனவே மர்ஹூம் அஸ்ரப் காலத்தில்,அமைச்சர் றிஸாத்திற்கும் மு.கா இற்கும் எது வித சம்பந்தமும் இருக்கவில்லை என்பதனை மேலுள்ள சம்பவங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

2000ம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தல் காலப்பகுதியில் இனவாதிகளின் அழுத்தமும்,அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவின் பிடிவாதமான செயற்பாடுகளும் மிகவும் வலுத்துக் காணப்பட்டிருந்தது.அரசினுள் இருந்துகொண்டே பல முரண்பாடுகளுடன் அஷ்ரப் போராடிக்கொண்டிருந்த முக்கிய கால கட்டமது.சந்திரிகா மீண்டும் ஆட்சி அமைப்பதாயின் முஸ்லிம்களின் காலடிக்கு வந்தாக வேண்டும் எனும் இக்கட்டினை சமூகப் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆயுதமாய்க் கொண்டு அஷ்ரப் அன்று களத்தில் இறங்கியிருந்த காலகட்டமது.அந்த மிக முக்கியமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து றிஷாத் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அபேட்சகராக வன்னி தேர்தல் களத்தில்,அதுவும் பெருந்தலைவர் அஷ்ரபுக்கான எதிரணியில் களமிறங்கி இருந்தார்.இத் தேர்தலின் பிற்பாடு அஷ்ரபினை மரணம் தழுவிக் கொண்டதால் இதுவே அவரது இறுதித் தேர்தலாகவும் அமைந்தது.அஷ்ரப் வாழ்ந்த காலப்பகுதியில் அஷ்ரபினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாத இவர் இன்று “அஷ்ரபின் கொள்கைகளுடன் ஹக்கீம் முரண்பட்டதால் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைக்கவேண்டியதாயிற்று ” என்று கூறுவதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

2001ம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்றத் தேர்தலானது அஸ்ரபின் மரணம்,மாவனல்லை கலவரம் ஆகிய இரண்டு சம்பவங்களின் சூடு ஆறுவதற்கு முன்பு ஏற்பாடாகி இருந்ததன் காரணமாக அத் தேர்தல் முஸ்லிம்களிடத்தில் ஒரு மிக முக்கிய தேர்தலாக பார்க்கப்பட்டது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு ஆளுத்கமை கலவரம்,பள்ளி உடைப்பு போன்றவற்றின் காரணமாக  மகிந்த ராஜ பக்ஸவினை முஸ்லிம்கள் எதிர்த்தார்களோ அவ்வாறு சந்திரிக்கா அரசினை இத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டிய சந்தர்ப்பம் என அதன் முக்கியத்துவத்தினைக் சுருங்கக் குறிப்பிடலாம்.இத் தேர்தலில் கூட மு.கா தலைமைத்துவத்தினை ஏற்காது மு.கா வினை எதிர்த்து சு.க சார்பாக அமைச்சர் றிஸாத் போட்டி இட்டிருந்தார்.
இத் தேர்தலில் மு.கா என்றும் இல்லாதது போன்று ஒரு வரலாற்று வெற்றியினைப் பதிவாக்கியது.இதன் பிற்பாடு மு.கா வினை எதிர்த்து முஸ்லிம் அரசியல் வாதிகளினால் அரசியல் செய்ய முடியாது என்ற நிலைமை தோற்று விக்கப்பட்டிருந்தது.இச் சந்தர்ப்பத்திலேயே மு.கா வின் மூத்த போராளியான வன்னி நூர் தீன் மசூறின் ஊடாக அமைச்சர் றிஸாத் மு.கா இல் இணைந்து கொண்டார்.அமைச்சர் றிஸாத்திற்கு உண்மையான சமூகப் பற்று இருந்திருப்பின் குறைந்த பட்சம் 2000,2001ம் ஆண்டுத் தேர்தல்களிலாவது மு.காவிற்கு ஆதரவளித்திருக்கலாம்.அதில் கூட ஆதரவளிக்காது அதன் பிற்பாடு ஆதரவளித்தமை அவர் மு.காவில் இணைந்தமை அரசியல் நோக்கம் கொண்டது என்பதனை தெளிவாக குறிப்பிடுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும் பான்மையினைப் பெற முடியாததன் காரணமாக  ஐ.தே.கவினை தன்னோடு இணைத்துக் கொண்டு ஆட்சியினைக் கொண்டு சென்றார்.இதனைத் தொடர விரும்பாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஜே.வி.பி தன்னோடு இணைந்த நம்பிக்கையுடன் அவ் ஆட்சியினைக் கலைத்துவிட்டு 2004 ம் ஆண்டுத் தேர்தலிற்கு சென்றார்.இத் தேர்தலிலும் மு.கா ஒரு வரலாற்று வெற்றியினை தன் வசப்படுத்தி மீண்டும் தனது பேரம் பேசும் சக்தியினை தக்க வைத்துக் கொண்டது.
இத் தேர்தலின் பிற் பாடும்  சந்திரிக்கா தலைமையிலான அரசிற்கு ஆட்சியமைக்க ஒரு அறுதிப் பெரும் பான்மை கிடைக்கவில்லை.சந்திரிக்கா அரசு ஆட்சி அமைக்க மு.காவின் உதவியினை உணர்ந்தது.ஆனால்,சந்திரிக்கா அரசினை ஏற்கும் மனப் பாங்கில் மு.கா தலைமை இருக்கவில்லை.சந்திரிக்கா அரசிற்கு ஆட்சியினை தொடர்ந்து  கொண்டு செல்ல மு.காவில் இருந்து சிலரினை பிரித்து தன் வசப்படுத்தும் கைங்கரியம் மாத்திரமே எஞ்சி இருந்தது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுசைன் பைலா,அமீர் அலி ஆகியோரினை தன்னுடன் இணைத்துக் கொண்டு மு.கா வின் பேரம் பேசும் சக்தியினை சு.க இடம் அடகு வைத்து விட்டு மு.காவுடன் இணைந்த மறு கணமே உண்ட கல்லையில் மண்ணை அள்ளிப் போட்டப் போல் ஒரு வேலையினைச் செய்துவிட்டு வெளியேறியவர் தான் அமைச்சர் றிஷாத்.எனவே,மு.காவில் இருந்து அமைச்சர் றிஸாத்தின் வெளியேறுகையும் மக்கள் நலனுக்காக அல்ல என்பதனை வரலாறுகள் சுட்டி நிற்கின்றன.அன்று இவரினால் அழிக்கப்பட மு.காவின் பேரம் பேசும் சக்தியினை இன்று வரை மு.கா பெறாமை குறிப்பிடத்தக்கது.அன்று அப் பேரம் பேசும் சக்தி அழிக்கப்படாமல் இருந்திருந்தால் மு.கா வரலாற்றில் பதிவிடக் கூடிய சாதனை ஒன்றினை நிகழ்த்தி இருக்கும்.இவர் அழித்த பேரம் பேசும் சக்தியினை உருவாக்கி சாதிக்கவே அஷ்ரப் தனது உயிரினை தியாகம் செய்து இக் கட்சியினை உருவாக்கி இருந்தார்.

இவ்வாறு மு.காவின் பேரம் பேசும் சக்தியினை அடகு வைத்து சென்றவரிற்கு வட மாகாண மீள் குடியேற்ற அமைச்சு கிடைத்தது.தன்னிடம் குறித்த அமைச்சு உள்ள போது அதிகம் அக்கறை காட்டாமல் இருந்த அமைச்சர் றிஸாத் தான் இன்று வேறு அமைச்சில் உள்ள போது மிக வீரியத்துடன் இவ் விடயத்தில் செயற்படுகிறார்.காற்றுள்ள போது தூற்றத் தவறி விட்டு காற்றில்லாத போது தூற்ற விளைவது அறிவுடமையல்ல. 2009ம் ஆண்டு மே மாதம் மெனிக்பார்மினை நோக்கி வந்த மூன்று இலட்சம் மக்களினை 2010ம் ஆண்டின் இறுதியில் மீள் குடியேற்ற முடிந்த இவரால் ஏன்? 1990 ம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட 50000 வில்பத்து மக்களினை குடியேற்ற இயலாது போனது? அண்மையில் இவர் வழங்கிய பேட்டி ஒன்றில் வெளிநாட்டு அழுத்தம் காரணமாக உந்தப்பட்ட அரசின் கட்டளைக்கு அடிபணியவும்,தமிழ் மக்கள் தகரக் கொட்டிலில் வாழ்ந்தமை எங்களுடைய உள்ளத்தினை வேதனைப்படுத்தியதன் காரணமாக தமிழ் மக்களை முதலில் குடியமர்த்தினோம் எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்கள் தகரக் கொட்டிலில் வாழ்ந்தமை இவரினை கவலை கொள்ளச் செய்துள்ளது என்றால் அந் நேரத்தில் வில்பத்துவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் என்ன குளிரூட்டப்பட்ட அறைகளிலா வாழ்ந்தார்கள்? வில்பத்து மக்கள் 25 வருட காலமாக அகதி வாழ்க்கை வாழ்பவர்கள்.ஆனால்,தமிழ் மக்கள் வெறும் ஓரிரு வருடங்கள் தான் அகதி வாழ்க்கை வாழ்பவர்கள்.வெளிநாட்டு அழுத்தத்தின் உந்தப்பட்ட அரசின் கட்டளைக்கு அடிபணிந்துள்ளதாக தன்னைக் குறிப்பிடுகிறார்.இன்று போராடும் இவரால் அன்று ஏன் போராட இயலாது போனது? மக்கள் இவரினை பாராளுமன்றம் அனுப்பியது அரசின் கட்டளைக்கு அடிபணியவா? இவ்வாறான சந்தர்ப்பத்தில் தங்களுக்காக போராடவா?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Advertisements

Posted on 26/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s