முஸ்லிம்கள் ஒரு கட்சியின் கீழ் ஒன்றிணைவதன் அவசியம்!

image

இலங்கை அரசியலில் மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பிற் பாடு இலங்கை முஸ்லிம்களினை அரசியலில் ஒரு குடையின் கீழ் எந்தக் கட்சியினாலும் இற்றை வரை கொண்டு வர முடிய வில்லை.மர்ஹூம் அஷ்ரபின் மரணத்தின் பிற் பாடு ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி காரணமாக மு.காவினை விட்டும் பலரும் பிரிந்து செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது.இதன் விளைவாக இலங்கை முஸ்லிம்களினை ஒரு குடையின் கீழ் ஒன்று கூட்டி வைத்திருந்த மு.கா பல கூறுகளாகச் சிதறியது.2004 ம் ஆண்டுத் தேர்தலின் பிற் பாடு மு.காவினை விட்டும் றிஸாத் பதியூர்தீன் தலைமையில் இன்னுமொரு குழுவினர் பிரிந்து சென்றதன் காரணமாக மு.கா தனது மிகப் பெரிய பேசும் சக்தியினையும் இழந்தது.அன்று மு.கா இழந்த பேரம் பேசும் சக்தியினை மு.காவினால் இற்றை வரை பெற முடியாமல் இருப்பது இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.

இவ்வாறு சிதறுண்டு போன மு.காவில் இருந்து முளைத்த ஒவ்வொரு கட்சிகளும்,தனி நபர்களும் முஸ்லிம்களின் குறித்த ஆதரவினைப் பெற்றதன் விளைவாக இலங்கை முஸ்லிம்களின் வாக்குகள் ஓரிடத்தில் குவிக்கப்படாது சிதறுண்டு போனது.ஒரு குறித்த விடயத்தில் அடித்துப் பேசி தங்களது பலத்தினை முன் வைத்து சாதிக்கும் அளவு எவ் முஸ்லிம் கட்சியும் எச் சந்தர்ப்பத்திலும் பலம் பெற வில்லை.முஸ்லிம்களிற்கு ஒரு பிரச்சினை எழுகின்ற போது அதனை தீர்ப்பதற்கு அரசு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக மு.காவினைக் கொள்வதா? அ.இ.ம.காவினைக் கொள்வதா? தே.காவினைக் கொள்வதா? ஏன்? தேசிய ஐக்கிய முன்னணியினைக் கொள்வதா? என்ற பிரச்சினை தான் காணப்படுகிறது.இன்று தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது அரசு அதற்கான தீர்விற்காய் முதலில் த.தே.கூவிடம் பேசவே நாட்டம் கொள்ளும்.அரசின் தீர்விற்கு த.தே.கூ உடன் படுமாக இருந்தால் அது இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் ஏற்றதற்கு ஈடாகவே அமையும்.அரசின் தீர்விற்கு த.தே.கூ உடன்படாத போதே அரசு வேறு வழிகளினைச் சிந்திக்கும்.இந் நிலைமை முஸ்லிம்கள் விடயத்தில் இல்லை.இந் நிலைமை முஸ்லிம்கள் விடயத்தில் ஏற்பட முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கென்று ஒரு பிரத்தியோகமான கட்சியாக ஒரு கட்சியினை தெரிவு செய்யாமையே பிரதான காரணமாகும்.
மகிந்த ராஜ பக்ஸ ஆட்சிக் காலத்தில் மு.கா,அ.இ.ம.கா,தே.கா ஆகிய கட்சிகள் அரசோடு ஒட்டிக் கொண்டிருந்த போதும் ஹஜ் போன்ற முஸ்லிம் விவகாரங்களினை கையாள முன்னாள் அமைச்சர் பௌசியினையே அதிகம் நியமித்தார்.மகிந்த ராஜ பக்ஸ ஆட்சிக் காலத்தில் ஹஜ் கோட்டா பகிர்வில் பிரச்சினை எழுந்த போது பிரச்சினைத் தீர்விற்கு இறுதியில் அரசு புத்தாசன அமைச்சிடம் ஒப்படைக்கும் நிலை தான் காணப்பட்டது.ஹஜ் முகவர்கள் கூட தங்கள் பிரச்சினைத் தீர்விற்கு முஸ்லிம் கட்சிகளிடம் செல்லவில்லை மாறாக முஸ்லிம்களின் எதிரியான பொது பல சேனாவிடம் சென்றதற்கான ஆதாரங்கள் தான் உள்ளன.இந்த விடயங்களில் கூட தலையிட முடியாத,தலையிடாத நிலையில் தான் முஸ்லிம் கட்சிகள் இருந்தன.
தற்போது மைத்திரி தலைமையில் அமையப் பெற்ற அரசில் முஸ்லிம் விவகார அமைச்சு ஐ.தே.கவினைச் சேர்ந்த ஒரு முஸ்லிமுக்கே சென்றுள்ளது.முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக பேரினக் கட்சிகள் முஸ்லிம் கட்சிகளினைக் கருதி இருந்தால் நிச்சயமாக முஸ்லிம்களின்  விடயங்களினைக் கையாள முஸ்லிம் கட்சிகளிடம் இப் பொறுப்புக்களினை,பதிவியினை ஒப்படைத்திருக்கும்.இப் பொறுப்புக்களினை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒப்படைக்காமை பேரினக் கட்சிகள் இக் கட்சிகளினை முஸ்லிம்களின் வாக்குகளினை பெறும் ஒரு தரகராக மாத்திரமே பார்க்கின்றது என்பதற்கான ஒரு சான்றாக குறிப்பிடலாம்.முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஏகோபித்த கட்சியாக ஒரு கட்சியினைத் தெரிவு செய்யாது அங்கும் இங்கும் வாய் வைத்து அலைவதும் முஸ்லிம்கள் தங்கள் பிரச்சினைகளினை அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்ள முடியாமைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.முதலில் எமது பிரச்சினைகளினைத் தீர்த்துக் கொள்ள முஸ்லிம் கட்சிகளில் ஒன்றினை முஸ்லிம்களின் ஏகோபித்த தெரிவாக தேர்வு செய்ய வேண்டும்.

இன்று இலங்கை முஸ்லிம்களின் மத விவகாரங்களினைக் கையாள முஸ்லிம் கலாச்சார அமைச்சர் இலங்கையில் உள்ளார்.இவர் முஸ்லிம்களிற்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு திட்டத்தினை வகுத்து அதனை இலகுவில் செயற்படுத்தும் நிலையில் இலங்கை பேரின மக்கள்,அரசியல் வாதிகளின் மனோ நிலைகள் இல்லை.எனவே,ஒரு திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற ஒரு பலம் வேண்டும்.அதற்கு ஒரு பலமிக்க முஸ்லிம் கட்சியே பொருத்தமானதாக அமையும்.முஸ்லிம்கள் பிரிந்து காணப்படும் போது முஸ்லிம் கட்சிகளினை இலகுவில் ஆட்சியாளர்கள் தங்கள் வசப்படுத்திக் கொள்வர் என்பதும் முஸ்லிம் கட்சிகளில் ஒன்றினை முஸ்லிம்களின் தங்களது ஏகோபித்த தெரிவாக ஆக்க வேண்டும் என்பதற்கான ஆதாரமாக குறிப்பிடலாம்.

மகிந்த ராஜ பாக்ஸவின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.இதன் போது முஸ்லிம் எம்.பிகள் சிலர் மௌனித்தாலும் பலரும் கொந்தளித்தார்கள்.உண்மையில் அங்கு நடந்த விடயம் இவர்களின் குரலிற்கு அங்கே பலம் இருக்கவில்லை.இவர்களின் அனைத்துக் குரல் கொடுப்புக்களும் செல்லாக் காசாகவே மாறின.இன்று முடிந்தால் தமிழ் மக்களினை எந்த அரசாவது சீண்டிப் பார்க்கட்டும் பார்க்கலாம்.அன்று ஆயுதப் போராட்டத்தால் சாதிக்க முடியாதவற்றினை இன்று அரசியல் போராட்டத்தால் தமிழ் மக்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.நாமும் அரசியலில் ஒன்று பட்டால் சாதிக்க முடியாமல் அல்ல.
மகிந்த ராஜ பக்ஸ முஸ்லிம்களிற்கு எதிராக செயற்படுகின்றார்,அவரினை வீழ்த்தினால் யாவும் சரியாகிவிடும் என முஸ்லிம்கள் நினைத்தனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள்  95 சதவீதத்திற்கும் மேலாக மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்து மஹிந்தவினை தோல்வியடையச் செய்து மைத்திரியினை ஜனாதிபதி அரியாசனத்தில் அமர்த்தவும் முக்கிய பங்கு வகித்தனர்.மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவையான தீர்வு கிடைத்தாப் போல் நிம்மதியும் கொண்டனர்.எந்த மைத்திரியினால் தீர்வு கிட்டும் என முஸ்லிம் மக்கள் நினைத்தார்களோ அந்த மைத்திரி தனது கட்சியிலேயே மஹிந்தவிற்கு ஆசனம் வழங்கி முஸ்லிம்களின் அனைத்து நம்பிக்கைகளின் மீதும் மண் அள்ளிப் போட்டுள்ளார்.இவரினையே அரசியலில் நாம் நம்பி பயணிக்க இயலாதென்றால் யாரினையும் நம்ப முடியாது என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

தற்போது சு.கவின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.இது ஐ.தே.கவிற்கு மிகவும் சார்பாகவும் அமைந்துள்ளது.இப்போது ஐ.தே.கவினையே முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என்ற தோற்றப்பாடும் வலுத்து வருகின்றது.2002 ம் ஆண்டு அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ரணில் தலைமையிலான அரசு முஸ்லிம்களினை ஒரு சிறு குழு எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களினை புறக்கணித்திருந்தது.மேலும்,இவ் விடயத்தில் மு.கா தீர்வு கேட்டுச் சென்ற போது தற்போதைய .தே.காவின் பிரதம வேட்பாளர் ரணில் அன்டன் பால சிங்கத்திடமும்,பிரபாகரனிடமும் தீர்வினைப் பெறுமாறு மு.காவிடம் கூறி இருந்தார்.இவர்களினை நம்புவதெல்லாம் ஒரு போதும் தீர்வாகப் போவதில்லை.இதற்கு எல்லாம் ஒரே தீர்வு நேரடியாக தேசியக் கட்சிகளினை முஸ்லிம் மக்கள் ஆதரிக்காது முஸ்லிம் கட்சி ஒன்றினூடாக காலத்திற்கு ஏற்ற கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மாத்திரமே கிடைக்கும்.

பொது பல சேன அரசியல் ரீதியாக பலம் பெற ஆரம்பித்துள்ளது.எதிர் காலத்தில் பாரிய கட்சியாக வியாபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.முஸ்லிம்கள் தங்கள் அரசியல் பலத்தினையும் இலங்கை அரசுக்கு,பேரினக் கட்சிகளுக்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.முஸ்லிம்களா? பொது பல சேனாவா? போன்றதொரு நிலைமை பேரினக் கட்சிகளுக்கு எழும் போது முஸ்லிம்களின் அரசியல் ரீதியான  பலம் தற்போது முஸ்லிம்களே எமக்கு வேண்டும் என பேரினக் கட்சிகள் கூறும் நிலையினை முஸ்லிம்களின் அரசியல் பலம் உருவாக்க வேண்டும்.நிச்சயமாக இப் பலமானது பேரினக் கட்சிகளுக்குள் முஸ்லிம்களின் பலம் மறைக்கப்படுவதன் மூலம் ஒரு போதும் தோற்றம் பெறப் போவதில்லை.

இன்று இலங்கைத் தமிழ் மக்கள் த.தே.கூவினை தங்களது ஏக பிரதிநிதியாக ஏற்றுள்ளனர் என்பதனை மறுக்க முடியாது.இந்த தமிழ் மக்களிற்கு அண்மையில் விடுவிக்கப்பட்டு ஓரளவு சாதகமான நிலைமை தோன்றியுள்ள  சம்பூர் காணிப் பிரச்சினையினைத் தவிர த.தே.கூ எதைச் சாதித்துள்ளது.தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் இதுவரை நீங்கள் எதைச் சாதித்துள்ளீகள்? என ஒருபோதும் த.தே.கூவிடம் கேட்கவில்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் அறுவடை செய்யப் போவதனை தெளிவாக விளங்கிய தமிழ் மக்கள் அதனை ஏற்று தற்போது பாலைவன அரசியலில் பயணம் செய்கின்றனர்.தமிழ் மக்களின் ஏற்கும் மனோ பக்குவம்,தெளிவு இலங்கை முஸ்லிம்களிடத்தில் இருப்பதாக அறிய முடியவில்லை.சேவை என்றால் சோரம் போகக் கூடியவர்களாகத் தான் உள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகளினைக் குறிப்பிடலாம்.

அன்று மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஆட்சியினை தக்க வைக்கும் அரசியல் சானக்கியங்களினை கற்றுக் கொடுக்குமளவு அரசியல் வல்லுனராக இருந்தார்.இன்றுள்ளவர்கள் தங்களின் இருப்பினைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாத அரசியல் வாதிகளாகத் தான் உள்ளனர்.முஸ்லிம் அரசியல் வாதிகள் என பெயர் சூட்டிக் கொண்டு தமிழ் மக்களிற்கு தொழில் வழங்குபவர்களாகவும்,சாராய பார்களிற்கு அனுமதி கேட்டு அரசிடம் செல்பவர்களாகவும் தான் உள்ளனர்.இவ்வாறு இருக்கும் அரசியல் வாதிகளின் பின் மக்கள் எவ்வாறு ஒன்று திரள்வது? எனக் கேட்கலாம்.

அரசியல் வாதிகள் ஒன்றும் வானத்திலிருந்து வருபவர்கள் அல்ல.நாம் தான் தேர்வு செய்கின்றோம்.நாம் பணம்,தொழில்,சேவை போன்றவற்றிற்கு சோரம் போகாது வாக்களிக்க திட சந்தர்ப்பம் பூண்டால் ஏன் எம்மால் ஒரு சிறந்த கட்சியினை உருவாக்க முடியாது? கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே எமது ஆட்சியாலர்களினை எமது தீர்க்கமான முடிவு கொண்டு மக்கள் பக்கம் அள்ளுண்டு வரச் செய்த சாதனையினை நாம் படைக்க வில்லையா? முஸ்லிம் கட்சிகளிடம் உங்கள் பயணம் எதைச் சாதிக்க? என்ற வினாவினை எழுப்பிப் பாருங்கள் எவரிடமும் எந்தக் கொள்கையுமோ,திட்டமுமோ இல்லை.வாக்குக் கேட்டு வீடு தேடி வருபவர்களிடம் காணிப் பிரச்சினை,எமது கலாச்சாரத்தினை பின் பற்றுவதில் ஏற்படுகின்ற பிரச்சினை,கரை யோர மாவட்டம் போன்ற எமது பிரச்சினைகளினை குறிப்பிட்டு இதற்காக உறுதியாக போராடுங்கள் வாக்களிக்கின்றோம் என அனைவரும் கூறிப் பாருங்கள்.நிச்சயமாக அவர்கள் எமது கோரிக்கைகளின் பால் அவர்கள் திருப்பப்படுவார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளினை தனது பிரச்சினையாக எடுத்து போராடக் கூடிய ஒரு தலைமைத்துவம் கொண்ட ஒரு கட்சியினை முஸ்லிம்கள் தங்களது ஏக கட்சியாக தெரிவு செய்ய வேண்டும்.

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக

Advertisements

Posted on 16/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s