மேகி என்னும் பூனைக்கு தனியாளாக மணிகட்டி, நூடுல்ஸ் விளம்பர மர்ம முடிச்சை அவிழ்த்த நேர்மை அதிகாரி.!

image

இந்திய சந்தையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கல்லாகட்டிவந்த ‘மேகி நூடுல்ஸ்’ விற்பனைக்கு சாவுமணி அடித்து, மூடுவிழா நடத்திய ஒரு நேர்மை அதிகாரியை நம்மில் பலரும் அறிந்திருக்க முடியாது.

ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு பால் பண்ணை தொழிலில் 1905-ம் ஆண்டு காலடி பதித்த நிறுவனம், நெஸ்ட்லே. காலப்போக்கில் குழந்தைகள் உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காலை உணவுக்கான மாவு வகைகள், காபித்தூள், தேயிலை, சாக்லேட் வகைகள், ஐஸ் கிரீம், குளிர்விக்கப்பட்ட பிற உணவு வகைகள், செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் மற்றும் குழந்தைகள் விரும்பும் நொறுக்குத்தீனி வகைகள் என தனது கால்தடத்தை ஆலவிருட்சமாக விரிவடைய வைத்தது.

இந்த தொழில்களின் மூலம் இன்று உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 110 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ‘மில்க்மெய்ட்’, ‘நெஸ்கபே’, ‘மேகி நூடுல்ஸ்’, ‘கிட் காட்’ உள்ளிட்ட சாக்லேட் வகைகள் விற்பனையாகின்றன. இதில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய சந்தையின் மூலமாக கிடைத்து வருகின்றது.

உலகம் முழுவதும் உள்ள 193 நாடுகளில் 447 தொழிற்சாலைகளை அமைத்து சுமார் 3 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு வேலை அளித்துவரும் நெஸ்ட்லேவுக்கு இந்தியாவின் உத்தராகண்ட், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பிரமாண்டமான தொழிற்சாலைகள் உள்ளன. ‘நெஸ்ட்லே இந்தியா’ என்ற வர்த்தக அடையாளத்துடன் விற்பனைக்கு வரும் நெஸ்ட்லேவின் தயாரிப்புகளுக்கு வானளாவிய புகழாரம் சூட்டி, ஏராளமான கவர்ச்சி விளம்பரங்களும் வெளியிடப்படுகின்றன.

இந்திய குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நினைவில் நிற்கும் உணவுப்பொருளாக கடந்த மாதம்வரை சந்தையில் தனியிடம் பிடித்து, தலைநிமிர்ந்து நின்றிருந்த ‘மேகி நூடுல்ஸ்’, இரண்டே நிமிடங்களில் தயாரித்து விடக்கூடியதாக இருப்பதால், சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் தங்களது குழந்தையை எப்படி சமாளிப்பது? அதற்கு பிடித்தமான உணவாக எதை தயாரிப்பது? என்ற தாய்மார்களின் கவலையும் மேகியின் வாயிலாக வெகுவாக குறைந்தது.

ஆனால், இந்த மேகி நூடுல்சுக்காக வெளியிடப்பட்ட மிகைப்படுத்த விளம்பரங்களில் ஒன்று, உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரியின் புருவத்தை உயர்த்த, அதன் காலங்கடந்த எதிர்விளைவு இன்றைய ஊடகங்களின் சூடான செய்தியாகவும், பரபரப்பான விவாதப் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த வி.கே. பாண்டே என்ற அந்த அதிகாரி, அம்மாநிலத்தில் பிரியாணி வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த ‘வாஹித் பிரியாணி’ உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவற்றில் பயன்படுத்த உகந்தது அல்ல என்று தெரியவந்த பல பொருட்களுக்கு தடை பெற்று தந்தவர்.

பிரிட்டானியா கேக்கில் முட்டை கலக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘இது சைவ கேக்’ என அந்நிறுவனம் செய்துவந்த போலி விளம்பரத்தையும் இவர் தோலுரித்து காட்டினார்.

நடிகை மாதுரி தீட்சித்தை வைத்து மேகி ஓட்ஸ் நூடுல்சுக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரப்படம் ஒன்றில் காலையில் எழுந்து குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்து, குழந்தைகள் களைப்படைந்த பின்னர் மேகி நூடுல்ஸ் சமைத்துதரும் மாதுரி தீட்சித், மேகி நூடுல்ஸ்தான் என் குடும்பத்தை சுறுசுறுப்பாகவும், துடிதுடிப்பாகவும் இயங்க வைக்கிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல.., என்னைப்போன்ற குடும்பத்தலைவிகளுக்கும் தேவையான முழு ஊட்டச்சத்து மேகியில் உள்ளது என்று பரிந்துரைக்கிறார்.

இவரது பரிந்துரை எந்த அளவுக்கு உண்மை? என்பதை கண்டறிவதற்காக, 10-3-2014 அன்று ஒரு கடைநிலை ஊழியரை உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்த உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரியான பாண்டே, அங்கிருந்து சில மேகி நூடுல்ஸ் பாக்கெட்களை வாங்கிவரச் செய்தார்.

அவற்றை பரிசோதனை செய்தபின்னர், மேல் சோதனைக்காக கோரக்ப்பூரில் உள்ள உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தார். 16 நாட்களுக்கு பிறகு கிடைத்த இந்த சோதனை முடிவை வைத்து, நெஸ்ட்லே உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததைக் கண்டுபிடித்தார். சோதனைக்கு அனுப்பப்பட்ட அந்த சாம்பிளில் அதிக அளவிலான எம்.எஸ்.ஜி. கலந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நெஸ்ட்லே இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு பாண்டே நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை எதிர்த்து நெஸ்ட்லே அப்பீல் செய்தது. இதனால், கடுப்பான பாண்டே மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்ப, நெஸ்ட்லேவுக்கு கைகால் ஆட்டம் காண ஆரம்பித்தது.

கொல்கத்தாவில் உள்ள தலைமை ஆய்வகத்தில் மேகி நூடுல்ஸ்களை பரிசோதனைக்கு அனுப்பிவைக்க அது முன்வந்தது. கொல்கத்தா ஆய்வக சோதனையில் மேகியின் பொய்முகம் அம்பலமானது. இந்த சோதனையின்போது நிலைமை இன்னும் மோசமானது. எம்.எஸ்.ஜி. மட்டுமல்லாமல் வேறு சில அபாயகரமான பொருட்களும் இருப்பதாக சோதனை முடிவு சுட்டிக் காட்டியதால் மேகி நூடுல்சுக்கு ஏற்பட்ட வர்த்தகரீதியான சிக்கல், இன்று.., முடிச்சே அவிழ்க்க முடியாத இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது.

சாதாரணமாக சில உணவுப் பொருட்களில் பத்து லட்ச அலகுக்கு 2.5 அலகு ஈயம் கலந்து தயாரிக்க இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், கொல்கத்தாவில் பரிசோதிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் சாம்பிளில் அதிர்ச்சியூட்டும் விதமாக 17.2 அலகு அளவுக்கு ஈயம் கலக்கப்பட்டுள்ள ‘பகீர் உண்மை’ வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடந்த வாரகாலமாக நாடு முழுவதும் கடைகளுக்கு அனுப்பப்பட்ட மேகி நூடுல்ஸ் வகைகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இனி, மேகி நூடுல்ஸ்களை தயாரிக்கவும், விற்கவும் கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் எதிரொலியாக பிற நிறுவனங்கள் தயாரிக்கும் குழந்தை உணவுப் பொருட்களை மிக தீவிரமாக கண்காணித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தவறு நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தனை அதிரடி நடவடிக்கைகளுக்கும் ‘பிள்ளையார் சுழி’ போட்டு முதல் நடவடிக்கை எடுத்து, மேகி என்ற பூனைக்கு தனியாளாக நின்று துணிச்சலுடன் மணிகட்டிய பாண்டேவை உத்தரப்பிரதேசம் மாநில ஊடகங்கள் இப்போது வளைத்து, வளைத்து போட்டோ பிடித்து, பேட்டிகண்டு வருகின்றன.

சமுதாயத்துக்கு இத்தனை நல்லதையும் செய்துவிட்டு, ஒரேயொரு வெற்றிப் புன்னகையை மட்டும் உதிர்க்கும் பாண்டே, ‘என்னை பெரிய ஹீரோவாக சித்தரிக்க வேண்டாம். உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரியாக எனது கடமையைதான் நான் செய்திருக்கிறேன். மற்ற வேலைகளை எல்லாம் நடத்தி, நடவடிக்கை எடுக்க பாடுபட்ட உயரதிகாரிகளுக்குதான் இந்த புகழும், பெருமையும் போய்சேர வேண்டும்’ என மிகவும் தன்னடக்கத்தோடு கூறுகிறார்.

Advertisements

Posted on 08/06/2015, in ஆரோக்கியம், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s