“வில்பத்து வில்லங்கம்”!

image

–    ஏ.எல்.நிப்றாஸ்-

மனிதனின் தேவைக்காக படைக்கபட்ட ஜீவராசிகளுக்கு இருக்கின்ற மதிப்பும் மரியாதையும் கூட இறைவனின் உயரிய படைப்பான மனிதனுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருப்பதை காண்கின்றோம். வனப் பாதுகாப்பு என்ற பெயரில் சில மிருகங்களுக்காகவும் வனாந்திரத்திற்காகவும், ஒரு இனக் குழுமத்தின் இருப்பும் தார்மீக உரிமையும் மறுக்கப்படுகின்றது. 
இந்த போராட்டத்தில் – மிருகங்கள் மிருகங்களின் பக்கம் நிற்கின்றன, மனிதர்கள் மனிதத்தின் பக்கம் நிற்கின்றனர். 
உலக வரலாற்றில் பல நகரங்கள், தீவுகள் இருந்த இடம் தெரியாமல் அழிவடைந்து போயிருக்கின்றன. இலங்கையில் வியாபித்திருந்த யுத்தமும் பல குக்கிராமங்களை அடையாளம் தெரியாமல்; சிதைவடையச் செய்திருக்கின்றது. முசலி மற்றும் அதனையண்டிய மீள்குடியேற்ற பிரதேச மக்களின் வாழ்வும் அப்படித்தான் ஆகிப்போனது. முன்னர் ஆயுதத்தை காட்டி விரட்டப்பட்டவர்களை இன்று சட்டத்தை காட்டி விரட்டும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. 
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்ட பிறகு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள மிக முக்கிய பிரச்சினையாக இது காணப்படுகின்றது. குரலற்ற இந்த மக்களின் குரலாக அமைச்சர் றிசாட் பதியுதீன் செயற்படுகின்றார். ஆனால் ஏனைய முஸ்லிம் தலைமைகள் வாழாவிருக்கின்றனர். ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததை இங்கு நினைவூட்டுவதா? அல்லது எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல என்று இதனை வர்ணிப்பதா என்று தெரியவில்லை. 
வெளியேற்றமும் மீள்குடியமர்வும்
சமூகக் கல்வியும் வரலாறும் பாடத்தைப் போல வில்பத்து சரணாலயத்தை புவியியல் வரைபடங்களோடு ஆராய்வதை விடவும், சர்ச்சைக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்விடம் பற்றிய அடிப்படை புரிதல் மிக அவசியமாகின்றது. வில்பத்து சரணாலயம் என்பது ஐந்து சிறு காடுகளை உள்ளடக்கியதாகும். புத்தளத்திற்கு வடக்காகவும் அனுராதபுரத்திற்கு வட மேற்காகவும் வடக்கு பெருநிப்பரப்பை ஊடறுத்து வியாபித்திருக்கின்றது இந் நிலப்பரப்பு. இதனைச் சூழவுள்ள ஒரு கிலோமீற்றர் இடப்பரப்பு பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப் பகுதியில் இதற்கு முன்னரும் இப்போதும் கூட எவ்வித மக்கள் குடியேற்றங்களும் அமையப் பெறவில்லை. 
ஆனால் அதற்கு அப்பாலான முசலி, மறிச்சுக்கட்டி, பாவற்குழி, காட்டுக்குழி என இன்னும் பல குக்கிராமங்களில் மக்கள் வாழையடி வாழையாக வாழ்கின்றனர். இவர்களுள் ஒரு தொகுதியினர் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீள குடியேறியவர்கள். இம் மக்கள் குடியேறிய இடத்தில்தான் சட்டமும் பேரினவாதமும் இப்போது கண் வைத்திருக்கின்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து மக்கள் அங்கு சட்ட விரோதமாக குடியேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது அவர்களது இறுதி இலக்காக இருக்கின்றது. 
புலிகள் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய அநியாயங்களைச் செய்திருக்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் இதை மறுப்பதற்கில்லை. அதில் மிக முக்கியமானதுதான் வடக்கின் இனச் சுத்திகரிப்பு. ‘அது ஒரு கசப்பான அனுபவம்’ என்று புலிகளே ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு மிகக் கேவலமான ஒரு நடவடிக்கையாக இது அமைந்தது. வடக்கின் பல பகுதிகளில் இருந்து இரவோடிரவாக இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள் கிட்டத்தட்ட 1 இலட்சம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இரண்டு பனடோல் குளிசைகளுக்கு அதிகமான மாத்திரைகளை கொண்டு செல்ல அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இரண்டு பாவாடைகள் உடுத்திச் சென்ற முஸ்லிம் பெண்களின் ஒரு பாவாடை உருவி எடுக்கப்பட்டதாக எல்லாம் ஏகப்பட்ட அருவருக்கத்தக்க, சோக கதைகள் வடக்கு முஸ்லிம்களிடம் இருக்கின்றன. 
வில்பத்து வனாந்திரத்திற்கு அந்தப்பக்கமாக குடியேறி இருக்கின்ற மக்கள் இவ்வாறு புலிகளல் விரட்டப்பட்டவர்கள்தான். 1990ஆம் ஆண்டு முசலியை சூழவுள்ள தமது பூர்வீக கிராமங்களில் இருந்து 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் உடுத்த உடையுடன் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். தமது பிள்ளைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் சைக்கிள்களிலும் உழவு இயந்திரங்களிலும் ஏற்றிக் கொண்டு புத்தளத்தை அண்டிய பிரதேசங்களை நோக்கி அம் மக்கள் நகர்ந்தனர். பலர் பல கிலோமீற்றர் தூரம் நடந்தே வந்தனர். துப்பாக்கிகள் மீதான உயிர்ப்பயம் அவர்களை திக்குத் தெரியாத காட்டில் கூட்டி வந்து விட்டது. 
அன்று முதல் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அவர்களது வாழ்க்கை அகதி முகாம்களிலும் அடைக்கலமளித்தோரின் கொல்லைப் புறங்களிலுமே கழிந்தது. தமிழீழம் கேட்டுப் போரிடாத அதேநேரம் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ஒரு சமூகம் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டது. இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட காலத்தில் முசலி பகுதிக்கு சென்று தமது சொந்த இடங்களை பார்வையிட்ட போதும் அவ்வுடன்படிக்கை மீறப்பட்டு யுத்தம் மீண்டும் தொடர்ந்ததால் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. 
இப்படியாக சொந்த நாட்டுக்குள்ளேயே நாடோடிகளைப் போல் வாழ்ந்த மக்களை மீளக் குடியேற்றுவதற்கான சாத்திய சூழல் யுத்தம் முடிவடைந்த பின்னரே ஏற்பட்டது. அதன்படி அப்போதைய அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் ஜனாதிபதி மஹிந்தவின் பூரண சம்மதத்துடனேயே முசலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பெருமளவிலான முஸ்லிம்களும் சிறிதளவு சிங்களவர்களும் குடியேற்றப்பட்டனர். இப் பிரதேசம் மீளக் குடியேறிய மக்களின் சொந்த மண் என்பதில் இரு நிலைப்பாடுகள் இல்லை. அவர்கள் இலங்கையில் அகதி வாழ்வை மிக அதிக காலம் அனுபவித்த மக்கள் என்றாலும் கூட அமைச்சர் றிசாட் பதியுதீனோ அல்லது வேறு யாரோ லொறிகளில் ஏற்றிவந்து திடுதிடுப்பென குடியமர்த்தவில்லை. 
மாறாக, இதற்காக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு சட்ட முறைப்படியே குடியேற்றம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த செயலணியில் வனப்பரிபாலன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், சுற்றாடல் அதிகார சபை, சுற்றாடல் அமைச்சு, மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளடங்கலாக மிக உயர்மட்ட அதிகாரிகள் அங்கம் வகித்திருக்கின்றார்கள். இனவாதம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மஹிந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு சலுகைகளை கொடுத்தோ, அல்லது சட்டத்தை மீறியோ குடியேற்றியிருக்கும் என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனமானது. 
எனவே அரசாங்கத்தின் அனுமதியுடன் மக்களால் புதர்கள் வெட்டப்பட்டு குடியேற்றம் இடம்பெற்றது. இவ்வாறு குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு அரை ஏக்கர் காணியும் கற்கள் மற்றும் தகரத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடும் வழங்கப்பட்டுள்ளது. இடம்பெயர் காலத்தில் மூன்று தலைமுறைகளாக பெருகிவிட்ட இம்மக்களுக்கு இவ்வசதிகள் போதாது என்ற போதும், தமது சொந்த இடத்தில் மீள் குடியேறுகின்றோம் என்ற ஒரே ஆறுதலுக்காக கிடைத்ததை போதுமாக்கிக் கொண்டார்கள். 
மூக்கை நுழைக்கும் இனவாதம்
ஆனால் சிலர் இப்போது ஒரு புதுக்கதை கூறுகின்றனர். வில்பத்து சரணாலயத்திற்கு உரித்தான காடுகளை அழித்து சட்டவிரோதமான முறையில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக பேரினவாத சக்திகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளன. மஹிந்த ஆட்சியில், சொல்வதை செய்யும் எடுபிடிகளாக இருந்த சில அதிகாரிகளுக்கும் இப்போது கொம்பு முளைத்திருக்கின்றது. தமக்கு சாதகமான பழைய ஆதாரங்கள், வர்த்தமானப் பத்திரிகைகள், வரைபடங்களை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்திருக்கின்றனர். அமைச்சர் றிசாட்டை கைது செய்யாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதத்தில் குதிக்கப்போவதாக ராவண பலய அறிவிக்கும் அளவுக்கு நிலைமை முற்றியிருக்கின்றது. 
முதன் முதலாக இது பற்றி மக்கள் விடுதலை முன்னணியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்தது. உடனே இது விடயத்தில் அக்கறை செலுத்திய ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டார். அப்பாவி முஸ்லிம்களின் குடியமர்வு தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே தனது நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி முதன்முதலாக பாவித்திருக்கின்றார் என்பது இங்கு கவனிப்பிற்குரியது. ஆனால் இதில் ஒரு நேர்மை இருந்தது. சட்டப்படி இது கையாளப்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது. 
ஆயினும் இனவாத சக்திகள் இதை கையில் எடுத்ததுதான் வேறு ஒரு கோணத்தில் இவ்விவகாரத்தை நகர்த்தியிருக்கின்றது. இதனால் வடபுல முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களுக்கும் மனதுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு ஏற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராவண பலயவின் பிக்குகள் குழுவொன்று இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து தங்களுக்குள் ஏதேதோ பேசிவிட்டு சென்றிருக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வில்பத்து மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு பொதுபலசேனா பிக்குகள் சிலர் அதிரடியாக வந்து போனதை இது ஞாபகப்படுத்துகின்றது.  
சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியது கட்டாயமானது. அது விடயத்தில் தவறுகள் விடப்பட்டிருந்தால் அவை மனிதாபிமான அடிப்படையில் திருத்தப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. ஆனால், கடும்போக்கு பௌத்த தேரர்களும் இனவாத அமைப்புக்களும் இதில் மூக்கை நுழைப்பதும் சட்டத்தை கையில் எடுப்பதும் அவர்களுக்கு தேவையில்லாத வேலை. இந்த நாட்டில் வடக்கிலும், கிழக்கிலும் ஏன் கொழும்பிலும் கூட பல மூவின மக்களும் கொல்லப்பட்ட போது அனுதாபப்படாத இந்த கடும்போக்குவாதிகள், இப்போது வில்பத்து சரணாலயத்தை பாதுகாக்க முற்படுவது வனாந்திரத்தின்மீதும் வன ஜீவராசிகள் மீதும்  கொண்ட காருண்யத்தால் மட்டும்தானா என்ற கேள்வி பல உப கேள்விகளைக் கொண்டது. 
வில்பத்திற்கு அப்பால் குடியேற்றப்பட்ட மக்கள் வந்தேறு குடிகளல்ல. சிலர் கதையளப்பது போல பாகிஸ்தானில் இருந்து வந்த யாரும் அங்கு குடியேற்றப்படவுமில்லை. அந்த மண்ணில் 1990ஆம் ஆண்டு வரை நல்ல செல்வச் செழிப்போடு அவர்கள் வாழ்ந்ததற்கான ஏகப்பட்ட சான்றுகளை அங்கு காணலாம். பள்ளிவாசல், சேதமடைந்த வீடுகள், கல்வெட்டுக்கள் என்று அவர்களது எச்சங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன. அந்த இடத்தில்தான் இப்போது மீளக் குடியேறி இருக்கின்றார்கள். 
எனது கணிப்பின்படி, இப் பிரதேசங்களில் இருந்து புலிகளுக்கு பயந்து 90ஆம் ஆண்டு மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்றால், பல வருடங்களாக இப்பகுதியில் அரச பொறிமுறை சரியாக இயங்கியிருக்க வாய்ப்பில்லை. புலிகளின் நடமாட்டமானது வனபரிபாலன அதிகாரிகளை அப்பகுதிக்கு வரவிடாது தடுத்திருக்கும். பாதுகாப்பு அரண்களுக்கு வெளியில் நின்று கொண்டுதான் காடுகளை பராமரித்திருக்கவும் கூடும். இக் காலப்பகுதியில் (அதாவது 20 வருடங்களில்) குடியிருப்பு பிரதேசங்களில் காடுகள் வளர்ந்து, ஊர்களும் காடுகள் போல மாறியிருக்க நிறைய சாத்தியமிருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்போது ஊரும் காடும் கலந்திருந்த நிலையில் தமது ஊருக்குள் இருந்த காடுகளை வெட்டியே மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். 25 வருடங்களுக்கு முன்னரான நில அமைவு பற்றி தெரிந்திருக்காத எந்த ஒரு நபருக்கும் இது வனஅளிப்பு போலவே தோன்றும். ஆனால் நடந்தது என்னவென்று தெரியாமல் சத்தம்போடக் கூடாது. 
இந்த மக்கள் முன்னர் அங்கு வாழ்ந்திருக்கின்றார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளையும் சட்டத்தையும் அனுசரித்து சட்டமுறைப்படி இப்போது மீள குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள். இச் செயலணிக்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் பசில் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த பலர் இது முறையான குடியேற்றம் என்று சொல்லியிருக்கின்றார்கள். சட்டத்தினதும் காடுகளினதும் காவலர்களுக்கு இதற்கப்பால் என்ன வேண்டும்?
யார் குற்றவாளிகள்?
மீள் குடியேற்றம் பற்றிய சர்வதேச அழுத்தம் வலுவடைந்திருந்த காலப்பகுதியில் இம் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் வில்பத்து பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதிக்குள்ளோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ ஒரு குடும்பமேனும் குடியேற்றப்படவில்லை என்றும் ஒரு அங்குல காடேனும்  அழிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்று அடித்துக் கூறுகின்றார் அமைச்சர் றிசாட். அதுமட்டுமன்றி இங்குள்ள மக்களுக்கு காணி உறுதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்று ஆதாரங்களை அள்ளி வீசுகின்றாhர் அவர். இது வில்பத்து சரணாலயம் அல்ல கல்லாறு காடுகள் என்றே அடையாளப்படுத்துகின்றோம் என வனபரிபாலன அதிகாரி ஒருவரும் தொலைக்காட்சியில் கூறினார். 
உண்மைகள் இவ்வாறிருக்க இனவாத சக்திகளும் கடும்போக்கு பிக்குகளும் நாட்டில் முஸ்லிம்களை தூண்டி மீண்டுமொரு அமைதியற்ற நிலையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். ஓரிரு ஊடகங்கள் இதற்காக திரைமறைவு கொந்தராத்துக்காரர்கள் போல செயற்படுவதாக முஸ்லிம்களிடையே பரவலாக பேசப்படுகின்றது. 
சரி – அவர்களின் வழிக்கே வந்தாலும், இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு காடும் அழிக்கப்படவில்லை என்பது போலல்லவா இவர்கள் நடந்து கொள்கின்றார்கள். மக்களுக்காகத்தான் மற்றைய வளங்கள் எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் பல குடியேற்றங்கள், மீள்குடியமர்வு வேலைத்திட்டங்கள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுவர்ணபூமி, ஜயபூமி காணி உறுதிகள் வழங்கப்பட்டன. 
உண்மையில் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதில் வனஜீவராசிகள் , வனபரிபாலன துறை அதிகாரிகளுக்கும் ஜே.வி.பி., ராவண பலய போன்றவற்றுக்கும் அக்கறை இருந்திருக்குமானால், இந்த மீள் குடியேற்றம் இடம்பெற்ற வேளையில் அவர்கள் என்ன நித்திரையில் இருந்தார்களா? உடனடியாக களத்தில் இறங்கி மீள் குடியேற்றத்தை தடுத்தி நிறுத்தியிருக்கலாம்தானே. அவ்வாறு செய்திருந்தால் அதற்கான மாற்று தீர்வை அப்போதே தேடியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மஹிந்த அரசில் வாயைத் திறந்தால் உள்ளே போட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் ஒன்றும் பேசாமல் இருந்ததாக அவர்கள் சொல்ல வருகின்றார்களா? 
சட்ட விரோத குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதற்காக அமைச்சர் றிசாட்டை மட்டும் கைது செய்ய முடியாது. ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள், அப்போதை வனபரிபாலன திணைக்கள உயரதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், கணக்கெடுடுப்பு நடத்தியோர் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட வேண்டும். குறிப்பாக தமது வேலையைச் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இன்று சட்டம் பேசும் அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  
இந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்கள் யாரென்று உலகறியும். வுடக்கின் பல பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் திடீரென முளைத்திருக்கின்றன. வடக்கு கிழக்கிலுள்ள பல பாரம்பரிய தமிழ், முஸ்லிம் பிரதேசங்களின் பெயர்களும் வரலாறும் இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளன. அம்பாறையிலும் வேறு பல இடங்களிலும் 1960களில் இருந்து அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியவர்கள் யாரென்று சொல்லத் தேவையில்லை. இதுவெல்லாம் சட்டத்தை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டவை என்பதைக் காட்டிலும் அரசியல் அதிகாரத்தின் மூலம் செய்யப்பட்டவை என்பதே உண்மையாகும். ஆனால் இதுவரையும் எந்த சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுகின்றபோதும் வனப்பாதுகாப்பு பற்றி பேசாதவர்கள் அல்லது தமக்குள் பேசி காரியத்தை முடித்தவர்கள் இன்று முஸ்லிம்கள் மீள் குடியேறியதை மட்டும் பூதாகரமாக்க நினைப்பது அவர்களது உள்மனக் கிடக்கைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. 
இவ்வாறான பிரச்சினை ஒன்றில் வடபுல முஸ்லிம்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்க அந்த வக்கற்ற மக்களின் குரலாக அமைச்சர் றிசாட் பதியுதீன் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கின்றார். அங்காங்கே அசாத் சாலி போன்ற ஓரிருவரது அறிக்கைகளும் வெளியாகின்றன. ஆனால் மற்றைய முஸ்லிம் தலைமைகள் வாயை திறந்ததாக கூட செய்திகள் வரவில்லை. இதைவிட முக்கியமாக அவர்கள் என்னதான் பிடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்? முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமோ, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவோ அல்லது ஐக்கிய ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கின்ற ஏனைய அரசியல்வாதிகளோ இது விடயத்தில் காத்திரமான பங்களிப்பை ஆற்றவில்லை என்றே  கூற வேண்டும்.
வடக்கு விவகாரத்தை றிசாட் மட்டுமே பார்த்துக் கொள்ளட்டும். அங்கு நமக்கு வாக்குகள் இல்லைதானே என்று ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. அல்லது மீள்குடியேற்றம் சட்டத்திற்கு முரணானது என்ற எண்ணத்தில் நீதியின் பக்கம் நிற்கப் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால், இது ஒரு தேர்தல் காலமாக இருந்திருந்தால் நிலைமைகள் வேறுமாதிரி இருந்திருக்கும். ஹக்கீம் வில்பத்து பற்றிப் பேசிப்பேசியே மேடைகளை அதிரவைத்திருப்பார். முஸ்லிம் அரசியல்வாதிகளின் அறிக்கைகளால் பத்திரிகைகள் நிறைந்திருக்கும். வில்பத்து வில்லங்கத்தை விற்று நிறைய வாக்கு சம்பாதித்திருப்பார்கள் நமது அரசியல் வியாபாரிகள். ஆனால் இது எதுவும் இப்போது நடக்கவில்லை. 
இது வஞ்சிக்கப்பட்ட மக்களின் இருப்பு, வாழ்வாதாரம் பற்றிய பிரச்சினை. ஜனாதிபதி மைத்திரிபால கூறியிருப்பது போல இதனை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். வில்பத்துவுக்கு அருகில் அவசரமாக மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சிறுசிறு தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பது உண்மைதான். அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, இந்த சூட்சுமங்கள் எதையும் அறிந்திராத அப்பாவி பொது மக்களை பலிக்கடாவாக்க யாரும் முனையக்கூடாது. மனிதாபிமானம் கிடைக்காத பட்சத்தில் காலம் கடத்தாது நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும். 
முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவர்கள் – காடுகளா, வனஜீவராசிகளா, மனிதர்களா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

Advertisements

Posted on 23/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s